மோட்டார் சைக்கிள் திருடிய ஆட்டோ டிரைவர் கைது
மார்த்தாண்டத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய ஆட்டோ டிரைவர் கைது
குழித்துறை,
கேரள மாநிலம் வைக்கம் கச்சேரிதறை பகுதியை சேர்ந்தவர் சாம்தாஸ். இவருடைய மகன் சரஞ்சாம் தாஸ் (வயது19). இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக மார்த்தாண்டம் மார்க்கெட் சாலையில் ஒரு வாடகை வீட்டில் தங்கியுள்ளார்.
சரஞ்சாம் தாஸ் நேற்று முன்தினம் மதியம் தனது மோட்டார் சைக்கிளை மார்க்கெட் சாலையில் நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கடந்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதையடுத்து அவர் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது வாகனத்தை ஒருவர் எடுத்து சென்றதாக கூறினர். உடனே சரஞ்சாம் தாஸ் மோட்டார் சைக்கிளை தேடி சென்றார். அப்போது பஸ் நிலையத்தில் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளுடன் நிற்பதை கண்டு அவரை கையும் களவுமாக பிடித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் மார்த்தாண்டம் காளிவிளையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (35) என்பதும், இவர் பூட்டை உடைத்து மோட்டார் சைக்கிளை திருடி சென்றதும் தெரிய வந்தது.
இதுகுறித்து சரஞ்சாம் தாஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் வினீஷ்பாபு வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.