ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்த போலீசாரை கண்டித்து நடுரோட்டில் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர் நாகர்கோவிலில் பரபரப்பு
நாகர்கோவிலில் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்த போலீசாரை கண்டித்து குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்த போலீசாரை கண்டித்து குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்டோ டிரைவருக்கு அபராதம்
நாகர்கோவில் பீச் ரோடு சந்திப்பில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் நேற்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காந்தி என்ற ஆட்டோ டிரைவர் பீச்ரோடு பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் தனது வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகக்கூறி அங்கு பணியில் இருந்த போலீசார் ஆட்டோவை அங்கிருந்து எடுத்து ஓரமாக நிறுத்துமாறு கூறினர். அப்போது போலீசாருக்கும், ஆட்டோ டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தாங்கள் சொல்வதைக் கேட்காமல் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோவை நிறுத்தியிருந்ததாகக் கூறி ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
குடும்பத்துடன் தற்கொலைக்கு முயற்சி
இதைக் கண்டித்து ஆட்டோ டிரைவர் காந்தி தனது மனைவி, மகனுடன் மாலையில் பீச் ரோடு சந்திப்புக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்து நடுரோட்டில் அமர்ந்தார்.
பின்னர் தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாக கூறியதோடு அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். உடனே அந்த பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் அவரை சமாதானப்படுத்தி குடும்பத்தினருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் ஏட்டு முத்துசங்கர், தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆட்டோ டிரைவர் காந்தி மீது கோட்டார் போலீசில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.