விடுதியில் விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை
குலசேகரத்தில் விடுதியில் விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
குலசேகரம்:
குலசேகரத்தில் விடுதியில் விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
டிரைவர்
குலசேகரம் அருகே மணலிவிளையைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 40). கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவி, குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார்.
இந்தநிலையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டு தனிமையாக வாழ்ந்து வந்த ராஜன் மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதற்கிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒருமுறை அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டார்.
இந்தநிலையில் குலசேகரம் சந்தை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து ராஜன் தங்கி வந்தார். அப்போது ராஜன், சகோதரி குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்யப்போவதாக அடிக்கடி கூறி வந்துள்ளார்.
விடுதியில் தற்கொலை
அதே சமயத்தில் நேற்று காலையில் ராஜன் தங்கிய அறை வெகுநேரமாகியும் திறக்கப்படவில்லை. மேலும் சகோதரி குடும்பத்தினர் செல்போனில் தொடர்பு கொண்டும் ராஜன் செல்போனை எடுக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவர்கள் விடுதிக்கு வந்து பார்த்துள்ளனர். அங்கு விஷம் குடித்த நிலையில் ராஜன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.