தொழிலாளர் நலவாரியத்தில் ஆட்டோ டிரைவர்கள் பதிவு செய்ய முகாம்


தொழிலாளர் நலவாரியத்தில் ஆட்டோ டிரைவர்கள் பதிவு செய்ய முகாம்
x

தஞ்சை மாவட்டத்தில் தொழிலாளர் நலவாரியத்தில் ஆட்டோ டிரைவர்கள் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வருகிற 13-ந்தேதி நடக்கிறது. நலவாரியம் சார்பில் 5 மாதத்தில் ரூ.1½ கோடி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் கூறினார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டத்தில் தொழிலாளர் நலவாரியத்தில் ஆட்டோ டிரைவர்கள் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வருகிற 13-ந்தேதி நடக்கிறது. நலவாரியம் சார்பில் 5 மாதத்தில் ரூ.1½ கோடி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் கூறினார்.

கண்காணிப்பு குழு கூட்டம்

தஞ்சை மாவட்ட தொழிலாளர் நல வாரிய கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், தஞ்சை மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம், மகப்பேறு, கல்வி, இயற்கை மரணம், விபத்து மரணம், கண்கண்ணாடி, முடக்கு ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

நலத்திட்ட உதவிகள்

மேலும் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத கட்டுமான தொழிலாளிகளுக்கு பணியிடை விபத்து மரண உதவித் தொகை ரூ.5 லட்சம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.கடந்த 5 மாதத்தில் மட்டும் தொழிலாளர் நல வாரியம் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் ரூ.1 கோடியே 59 லட்சத்து 17 ஆயிரத்து 700-க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆட்டோ டிரைவர்களுக்கு நலவாரியத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் 1 மணி அளவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

பதிவு செய்யலாம்

இதில் ஆட்டோ டிரைவர்கள் தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம் 2 ஆகியவற்றுடன் நேரில் வந்து நலவாரிய அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஆதார் கார்டில் செல்நம்பர் இணைத்திருக்க வேண்டும். பெண் ஆட்டோ டிரைவர்களுக்கு புதிய ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story