போக்குவரத்து போலீசாரை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் தர்ணா
போக்குவரத்து போலீசாரை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் நகர போக்குவரத்து போலீசாரை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் நேற்று காலை ஆட்டோக்களுடன் பெரம்பலூர் சரக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், போக்குவரத்து போலீசார் சட்டத்திற்கு புறம்பாக ஆட்டோக்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கிறார்கள். ஆட்டோ ஓட்டும் போது டிரைவர் ஹெல்மெட் அணியவில்லை என்றும், ஒரே நாளில் அடுத்தடுத்து அபராதம் ஆன்லைன் மூலம் விதிக்கப்படுகிறது. இதனால் ஆட்டோ டிரைவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். மேலும் அவர்கள் போக்குவரத்து போலீசாரை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து ஆட்டோ டிரைவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமாரிடம் வழங்கப்பட்டது.