ஆட்டோ டிரைவர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு
ஆட்டோ டிரைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், பட்டிவீரன்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 சிறுவர்கள் சிக்கினர்.
ஆட்டோ டிரைவர்
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி மேற்கு அண்ணாநகர் சுயம்புநாகேஸ்வரியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் கல்யாணி. ஆட்டோ டிரைவர். இவருக்கு சொந்தமான வீட்டின் மேல்மாடியில் தனது மனைவி, மகள், மகனுடன் கல்யாணி வசித்து வருகிறார்.
கீழ்தளத்தில் உள்ள வீட்டை, அதே ஊரை சேர்ந்த கட்டிட காண்டிராக்டரான கர்ணன் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீட்டில், கர்ணன் தனது குடும்பத்துடன் வசிக்கிறார்.
பெட்ரோல் குண்டு வீச்சு
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள், கர்ணன் வசிக்கிற வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினர். இதில் பெட்ரோல் குண்டு, பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த சத்தம் கேட்டு கல்யாணி, கர்ணன் மற்றும் அப்பகுதி மக்கள் திடுக்கிட்டு எழுந்தனர்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், வீட்டின் முன்பகுதியில் உள்ள 'சுவிட்ச் பாக்ஸ்' தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனை கண்ட அவர்கள், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். மேலும் பெட்ரோல் குண்டு வீசியவர்களை அக்கம்பக்கத்தினர் தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. அதற்குள் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் சம்பவ இடத்துக்கு மோப்பநாய் டிம்பி வரவழைக்கப்பட்டது. அது, சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிதுதூரம் ஓடி சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதேபோல் தடய அறிவியல் நிபுணர்களும் அங்கு தடயங்களை சேகரித்தனர்.
இதற்கிடையே சம்பவம் நடந்த வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 3 பேர் பாட்டில்களுடன் தெருவில் நடந்து செல்வதும், பெட்ரோல் குண்டு வீசியதில் வீட்டில் இருந்து தீப்பிழம்புகள் வரும் காட்சியும் பதிவாகி உள்ளது. அதனை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
3 பேர் சிக்கினர்
போலீசார் நடத்திய விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசியது பட்டிவீரன்பட்டியை சேர்ந்த 16, 17 வயது மதிக்கத்தக்க 3 சிறுவர்கள் என்று தெரியவந்தது. இவர்களுக்கும், கர்ணன் மகனுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்துள்ளது.
இந்த பிரச்சினை காரணமாக நள்ளிரவில் அவர்கள் பெட்ரோல் குண்டை வீசி உள்ளனர். இதனையடுத்து 3 பேரையும் பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில் 2 பேர் பிளஸ்-1 மாணவர்கள் ஆவர். ஒருவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டோ டிரைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், பட்டிவீரன்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.