ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில், சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சிவாஜி, சி.ஐ.டி.யூ. மாநில துணைத்தலைவர் கே.ஆர்.கணேசன், மாவட்ட செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், ஆன்லைன் அபராத முறையை கைவிட வேண்டும். ஆட்டோவுக்கு புகைச்சான்று மற்றும் ஸ்டிக்கர் ஆகியவற்றுக்கு அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்க வேண்டும். மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது. ஆட்டோ வாங்குவதற்கு மானியம் வழங்குவதோடு, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஆட்டோ டிரைவர்களுக்கு நலவாரியம் மூலம் போனஸ் மற்றும் வீடு கட்டுவதற்காக நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
இதில், திண்டுக்கல்லை சேர்ந்த ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். முடிவில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார்.