தானியங்கி மது எந்திரங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் திறக்கப்பட்டவை; அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்
தானியங்கி மது எந்திரங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் திறக்கப்பட்டவை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சென்னை,
சென்னை அண்ணாநகர், வி.ஆர். மாலில், செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மால் ஷாப்பில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் எல்.சுப்பிரமணியன், மோகன் எம்.எல்.ஏ., பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக் குழுத் தலைவர் நே.சிற்றரசு மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
96 மதுக்கடைகள் மூடல்
தமிழகம் முழுவதும் தி.மு.க. ஆட்சியில் 96 மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. தானியங்கி மது எந்திரம் வணிக வளாகத்திற்குள் கடைக்கு உள்ளே பொருத்தப்பட்டு உள்ளது. இவற்றில் எப்படி சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளே நுழைந்து மதுபானம் பெறமுடியும்
கடை திறந்திருக்கும் நேரமான மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இங்கு எந்திரம் மூலமாக மதுபானம் பெறமுடியும், அந்த நேரத்தில் கடையின் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர் இருப்பார்கள்.
அ.தி.மு.க. ஆட்சியில்...
தானியங்கி மது எந்திரங்கள் கடந்த 2019-ல் திறக்கப்பட்டு உள்ளன. யார் திறந்தது, 2019-ல் யார் ஆட்சி, மொத்தம் 4 கடைகளில் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டு உள்ளன.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2013, 2014, 2018 மற்றும் 2019-ல் திறக்கப்பட்ட மால் ஷாப்புகளில்தான் தானியங்கி எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
அதுவே, தெரியாமல் நாங்கள் புதிதாக எந்திரம் கொண்டு வந்து பொதுமக்கள் கூடுகின்ற இடங்களில் ஏ.டி.எம். எந்திரம் போல பொருத்தப்போகிறோம் என்ற பொய் செய்தியை மக்களிடத்திலே பரப்பியுள்ளார்கள்.
அதிக விலைக்கு விற்பதை தடுப்பதற்காகவும், டாஸ்மாக்கில் சீர்திருத்த நடவடிக்கையாகத்தான் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர் ஏதோ மதுக்கடையே திறக்காத மாதிரியும், இந்த டாஸ்மாக் நிறுவனத்தையே நிறுத்தி வைத்துவிட்டு அரசு நிர்வாகம் நடத்தியதை போலவும் பேசுகிறார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும் சரி, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆக இருந்தாலும் சரி என்றைக்காவது நாடாளுமன்றத்தில் இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று ஒரு கவன ஈர்ப்பு தீர்மானமோ அல்லது ஒரு தனி நபர் தீர்மானமோ கொடுத்திருப்பார்களா, நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு தைரியம் இல்லை, துணிச்சல் இல்லை.
அபராதம்
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 500 கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான கணக்கெடுப்பு பணிகள் தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளது.
கூடுதல் விலைக்கு மது விற்றதாக வந்த புகார்களின் அடிப்படையில் 1,977 பணியாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு சுமார் 5.50 கோடி ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு செந்தில்பாலாஜி கூறினார்.