தானியங்கி மஞ்சப்பை எந்திரம்
ஓ.என்.ஜி.சி. சார்பில் வழங்கப்பட்ட தானியங்கி மஞ்சப்பை எந்திரத்தை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.
திருவாரூரில், ஓ.என்.ஜி.சி. சார்பில் வழங்கப்பட்ட தானியங்கி மஞ்சப்பை எந்திரத்தை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.
மஞ்சப்பை எந்திரம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ ்முயற்சியிலும், தமிழ்நாடு மாசுகட்டுபாடு வாரியத்தின் பரிந்துரையிலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் தானியங்கி மஞ்சப்பை எந்திரத்தை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கியது.
திருவாரூரில் நடந்து வரும் புத்தக திருவிழாவில், மஞ்சப்பை எந்திரத்தை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, ஓ.என்.ஜி.சி. குழும பொதுமேலாளர் மாறன், மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரி அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரூ.10 செலுத்தினால்...
நிகழ்ச்சியில் ஓ.என்.ஜி.சி. குழும பொதுமேலாளர் மாறன், மஞ்சப்பை எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த எந்திரம் கியூ ஆர் கோர்டு மூலம் இயங்கும். பொதுமக்கள் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்றவற்றின் மூலம் ரூ.10 செலுத்தினால் ஒரு மஞ்சள் பை வெளியே வந்து விடும். எந்திரத்தில் பை இல்லை என்றால் செலுத்தப்பட்ட பணம் செலுத்துவோர் வங்கி கணக்கிற்கு மீண்டும் வந்து விடும்.
தற்போது இந்த எந்திரம் புத்தகக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. விழா முடிந்த பிறகு மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனை படி ஒரு மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் மஞ்சள் பை எந்திரம் திருவாரூர் உழவர் சந்தையில் வைக்கப்படும்.
வங்கி கணக்குக்கு வந்து விடும்
மகளிர் சுய உதவிக்குழுவால் தைக்கப்பட்ட மஞ்சப்பைகள் எந்திரத்துள் வைக்கப்பட்டு நுகர்வோர் செலுத்தும் பணம் சுய உதவிக்குழுவின் வங்கிக் கணக்கிற்கு சென்று விடும். இதன் மூலம் சுய உதவிக் குழுவிற்கு வேலை வாய்ப்பும், வருமானமும் ஏற்படும் என்றார். இதை தொடர்ந்து கலெக்டரும், மாவட்ட வருவாய் அலுவலரும் எந்திரத்தில் செயல் விளக்கம் செய்து பார்த்தனர்.
நிகழ்ச்சியை ஓ.என்.ஜி.சி. சமூகப் பொறுப்புணர்வு திட்ட அதிகாரி முருகானந்தம் ஒருங்கிணைத்தார். இந்த எந்திரம் சென்னையைச் சேர்ந்த சர்வோ கனெக்ட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாராட்டு
மஞ்சள் பை எந்திரத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்ததால் கலெக்டருக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கும் பொதுமக்கள் பாராட்டி தெரிவித்தனர்.