முருங்கை மரங்களில் பூச்சிமருந்து தெளிக்க தானியங்கி எந்திரம்
கள்ளிமந்தையம் அருேக முருங்கை மரங்களில் பூச்சி மருந்து தெளிக்க தானியங்கி எந்திரத்தை விவசாயிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம், இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம், பொருளூர், கப்பல்பட்டி, வாகரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முருங்கை பயிர் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது இந்த பகுதிகளில் முருங்கைக்காய் அமோக விளைச்சல் கண்டுள்ளது. இதற்கிடையே முருங்கை மரங்களை பூச்சி, புழு தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். ஆனால் மருந்து தெளிப்பானை முதுகில் தூக்கிக்கொண்டு நடந்தே பல மணி நேரம் சென்று மரங்களில் மருந்து தெளிக்கவேண்டும். அப்போது உயரமான மரங்களில் மருந்து தெளிப்பதில் சிக்கல் ஏற்படும். இதனால் காலவிரயம் மற்றும் கூலி செலவு அதிகரிக்கும் நிலை உள்ளது. ஏற்கனவே விவசாய பணிகளுக்கு ஆட்கள் தட்டுப்பாடு உள்ள நிலையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கள்ளிமந்தையம் அருகே உள்ள கப்பல்பட்டியை சேர்ந்த விவசாயிகளான செல்வபிரகாஷ், சவடமுத்து ஆகியோர் பூச்சிமருந்து தெளிக்க தானியங்கி எந்திரத்தை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். இந்த தானியங்கி மருந்து தெளிப்பு எந்திரத்தை சிறிய டிராக்டரில் பொறுத்தி, அதன் பின்பகுதியில் தண்ணீர் தொட்டி வைத்துள்ளனர். அதில், போதுமான மருந்து மற்றும் தண்ணீர் கலந்து வைத்துவிட்டு, எந்திரத்தை இயக்க வேண்டும். அப்போது அந்த எந்திரம் மரங்களுக்கு மருந்தை பீய்ச்சி அடித்துவிடும். அதேபோல் தேவைக்கு ஏற்ப சுழன்று அடிக்கும் வசதியையும் செய்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி சவடமுத்து கூறுகையில், நான் 10 ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்துள்ளேன். இந்த மரங்களுக்கு மருந்து தெளிக்க வேண்டும் என்றால் ஆட்கள் ஒருவாரம் வேலை செய்ய வேண்டும். தற்போது ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் மருந்து தெளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இந்த தானியங்கி எந்திரத்தை கண்டுபிடித்துள்ளேன். இதனால் கூலி செலவு மற்றும் காலவிரயம் மிச்சமாகியுள்ளது என்றார்.