ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிடும் தானியங்கி 'சிக்னல்' திட்டம்
ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிடும் தானியங்கி ‘சிக்னல்’ திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டது
ஆம்புலன்ஸ் வாகனங்கள் சாலைகளில் தடையின்றி செல்வதற்கு வசதியாக தானியங்கி சிக்னல் திட்டத்தை சென்னையில் போக்குவரத்து போலீசார் செயல்படுத்தி உள்ளனர்.
ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்ததும், அதற்கு வழிவிடும் வகையில் சிக்னல்களில் பச்சை விளக்கு எரியும். இந்த புதிய திட்டத்தின் தொடக்க விழா நேற்று சென்னை கீழ்ப்பாக்கம் ஈகா சந்திப்பு சிக்னல் அருகில் நடந்தது.
போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி சரத்கர் இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக சென்னையில் உள்ள காவேரி, ரேலா மற்றும் குளோபல் ஆகிய 3 தனியார் ஆஸ்பத்திரிகளின் 25 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு மட்டும் வழிவிடும் வகையில், 16 போக்குவரத்து சிக்னல்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அடுத்தகட்டமாக 40 சிக்னல்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொழில் நுட்ப திட்டம் என்று அழைக்கப்படும், இந்த திட்டம் இந்தியாவிலேயே சென்னையில் முதன் முதலாக தொடங்கப்பட்டு உள்ளதாகவும், போக்குவரத்து போலீசார் குறிப்பிட்டனர். இணை கமிஷனர் மயில்வாகனன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.