ஆட்டோக்களை 'க்யூ ஆர் கோடு' செயலி மூலம் இயக்க நடவடிக்கை
தஞ்சை மாநகராட்சி பகுதியில் க்யூ ஆர் கோடு செயலி மூலம் ஆட்டோக்களை இயக்குவது குறித்து டிரைவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
தஞ்சை மாநகராட்சி பகுதியில் க்யூ ஆர் கோடு செயலி மூலம் ஆட்டோக்களை இயக்குவது குறித்து டிரைவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
தஞ்சை மாநகராட்சி பகுதியில் க்யூ ஆர் கோடு செயலி மூலம் ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலேசானை கூட்டம் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மேயர் சண். ராமநாதன் தலைமை தாங்கினார். இதில் தஞ்சை மாநகரில் க்யூ ஆர் கோடை பயன்படுத்தி புதிய செல்பேசி செயலி மூலம் ஆட்டோக்களை இயக்குவது தொடர்பாக 'ஊர் கேப்ஸ்' என்ற நிறுவன நிர்வாகி மரிய ஆண்டனி பேசுகையில், 'ஆட்டோ டிரைவர்களுக்கு நிலையான வருமானமும், பயணிகளுக்கு பாதுகாப்பான பயணமும் கிடைக்கும் வகையில், இருவரும் பேரம் பேசாமல் உரிய கட்டணத்தில் க்யூ ஆர் கோடு மூலம் ஸ்மார்ட் போனில் புதிய செயலி உதவியுடன் ஆட்டோக்களை இயக்க இந்நிறுவனம் முன் வந்துள்ளது.
க்யூ ஆர் கோடு செயலி
மேலும் கோவையில் இந்த திட்டம் கடந்த 80 நாட்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதேபோல, தஞ்சையிலும் க்யூ ஆர் கோடு செயலி திட்டத்தை செயல்படுத்த ஆட்டோ டிரைவர்களின் ஒத்துழைப்பு தேவை' என்று கூறினார்.இதற்கு ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில், 'தஞ்சையில் 3 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. தற்போது சிலர் மட்டுமே இந்த கூட்டத்துக்கு வந்துள்ளோம். எனவே, அனைத்து ஆட்டோ டிரைவர்களிடமும் இந்த திட்டம் தொடர்பாக கலந்து பேசி விரைவில் அதற்கான முடிவை தெரிவிக்கிறோம்' என்றனர்.கூட்டத்தில் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, உதவி செயற் பொறியாளர் ராஜசேகரன், நகர போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆனந்த், மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.