ரப்பர் மரங்களில் இலையுதிர் காலம் தொடங்கியது
குமரி மாவட்டத்தில் ரப்பர் மரங்களில் இலையுதிர் காலம் தொடங்கியதால் பால் வெட்டும் தொழில் நிறுத்தப்பட்டுள்ளது.
குலசேகரம்,
குமரி மாவட்டத்தில் ரப்பர் மரங்களில் இலையுதிர் காலம் தொடங்கியதால் பால் வெட்டும் தொழில் நிறுத்தப்பட்டுள்ளது.
இலையுதிர் காலம்
குமரி மாவட்டத்தில் ஏராளமான அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ரப்பர் மரங்களில் இலையுதிர் காலம் தொடங்கும். இலையுதிர்வு காரணமாக ரப்பர் மரங்கள் இலைகளின்றி வெறும் கிளைகளோடு காட்சியளிக்கும்.
இந்த காலத்தில் ரப்பர் மரங்களில் பால் உற்பத்தி கடுமையாக குறைந்து விடும். இதனால் மரங்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் ரப்பர் பால் வெட்டும் தொழில் நிறுத்தி வைக்கப்படும்.
இந்த மரங்களில் இலைகள் முழுமையாக துளிர்த்த பிறகு ஏப்ரல் மாதத்தில் மீண்டும் பால் வெட்டும் தொழில் தொடங்கும்.
பால் வெட்டும் தொழில் நிறுத்தம்
குமரி மாவட்டத்தில் தற்போது ரப்பர் மரங்களில் குளிர் கால இலையுதிர்வு நடைபெறுகிறது. இதனால் ரப்பர் மரங்கள் இலைகள் இல்லாமல் காட்சி அளிக்கிறது. அத்துடன் பால் வெட்டும் வேலை படிப்படியாக நிறுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சிறு தோட்டத் விவசாயிகள் பால் வெட்டுதலை நிறுத்தி வருகின்றனர்.
அரசு ரப்பர் கழகம் மற்றும் பெரிய தனியார் ரப்பர் தோட்டங்களில் இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாதம் 15 -ந் தேதியில் பால் வெட்டும் தொழில் நிறுத்தப்படும்.
இதனால், தொழிலாளர்களுக்கு அதிகபட்சம் 2 மாதம் வேலை இழப்பு ஏற்படும்.
சுண்ணாம்பு திரவம் பூச வேண்டும்
இலையுதிர்வு குறித்து முன்னோடி ரப்பர் விவசாயி ஒருவர் கூறியதாவது:-
ஆண்டுதோறும் ரப்பர் மரங்களில் இலையுதிர்வு நடைபெறும். இந்த காலத்தில் பால் வெட்டும் தொழில் செய்யாமல் இருப்பது நல்லது. இக்காலத்தில் இளம் ரப்பர் மரங்களின் பட்டைகள் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் பட்டைகளில் வெள்ளை நிறத்தில் சுண்ணாம்பு திரவம் பூச வேண்டும். பால் வெட்டும் மரங்களில் பட்டை வெட்டப்பட்ட பகுதிகளில் மீண்டும் பட்டை வளரும் வகையில் 'ரப்பர் கோட்' எனப்படும் பெட்ரோலியக் கலவை பூச வேண்டும். மரங்களில் இலைகள் துளிர்க்கத் தொடங்கிய பின் அவற்றின் இலைகளில் பூஞ்சான் தாக்கி பால் உற்பத்தி பாதிக்கப்படுவதைத் தடுக்க தேவையான மருந்துகள் தெளிக்க வேண்டும். தற்போது ரப்பரின் விலை குறைவாக இருப்பதால், விவசாயிகள் முன்கூட்டியே பால்வெட்டுதலை நிறுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.