திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா - 4-ந் தேதி தொடங்குகிறது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா வருகிற 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா வருகிற 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதுகுறித்து கோவில் கோவில் இணை ஆணையர் மு.கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆவணித்திருவிழா
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. மாலையில் அப்பர் சுவாமிகள் கோவிலில் இருந்து தங்க சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
குடவருவாயில் தீபாராதனை
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 8-ந் தேதி மேலக்கோவிலில் இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடத்தப்பட்டு, சுவாமியும், அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வருதல் நடக்கிறது. 9-ந் தேதி காலையில் கோ ரதம், இரவில் வெள்ளி ரதம் வீதி உலா வருதல், 10-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி, காலை 8.45 மணிக்கு சுவாமி, ஆறுமுகப்பெருமான் வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருள்கிறார். பின்னர் பிள்ளையன்கட்டளை மண்டபத்திற்கு வந்தடைந்ததும், அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டு, மாலை 4 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
தேரோட்டம்
11-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி சுவாமி எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோவில் சேருகிறார். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்று, பகல் 12 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா ெசன்று கோவில் வந்து சேருகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 13-ந் தேதி காலை 6 மணிக்கு நடக்கிறது.
ஆவணித்திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றம் மற்றும் 7-ம் திருவிழான்று அதிகாலை 1 மணிக்கும், மற்ற நாட்களில் அதிகாலை 4 மணிக்கும் நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து மற்ற காலபூஜைகள் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.