அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம்


அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம்
x

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்:

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

சாமிதோப்பு தலைமைப்பதி

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து விழா நாட்களில் சிறப்பு பணிவிடை, உச்சிப்படிப்பு, அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

விழாவின் 11-வது நாளான நேற்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி அதிகாலை 4 மணிக்கு திரு நடைதிறத்தலும், தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், காலை 11 மணிக்கு வைகுண்டசாமி பச்சை பல்லக்கு வாகனத்தில் வந்து பஞ்சவர்ண தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது.

தேரோட்டம்

பின்னர் மேள, தாளங்கள் முழங்க சந்தன குடம், முத்துக்குடை ஏந்திய பக்தர்கள் முன்னே செல்ல காவி உடையணிந்த அய்யாவழி பக்தர்கள் அய்யா சிவ சிவ அரகரா, அரகரா என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேரோட்ட நிகழ்ச்சிக்கு குரு ஏ.சாமி தலைமை தாங்கினார்.

குருக்கள் ஏ.ராஜசேகரன், ஏ.தங்க பாண்டியன் மற்றும் வக்கீல் ஆனந்த், என்ஜினீயர் அரவிந்த், வக்கீல் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம், சாமிதோப்பு ஊராட்சி தலைவர் மதிவாணன், வடக்கு தாமரை குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பார்த்தசாரதி உள்பட பலர் அய்யாவழி பக்தர்களுடன் இணைந்து தலைப்பாகை அணிந்து தேரோட்ட நிகழ்சியில் கலந்து கொண்டனர்.

திரளான பக்தர்கள் பங்கேற்பு

தலைமைப்பதியின் முன்பிருந்து புறப்பட்ட திருத்தேர் கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேல ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. அப்போது அய்யா வைகுண்டசாமிக்கு பழம், வெற்றிலை, பாக்கு, பன்னீர் உள்ளிட்ட பொருட்களை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுருளாக படைத்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருத்தேர் மாலை 6 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் இரவு 7 மணிக்கு அய்யாவின் ரிஷப வாகன ஊர்வலம் நடைபெற்றது.

தேரோட்டத்தையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சாமிதோப்பிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


Next Story