அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம்


அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
x

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆவணி திருவிழா

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு சிறப்பு பணிவிடை, காலை 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் குருமார்கள் பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியறை பணிவிடைகளை ஜனாயுகேந்த், ஜனாவைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்திருந்தனர். உச்சிப்படிப்பு, பணிவிடைகளை பையன் கிருஷ்ண நாம மணி செய்தார். மதியம் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதானம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், மதியம் உச்சி படிப்பும், இரவு வாகன பவனியும், அன்னதானமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

அய்யா வீதி வலம் வருதல்

2-ம் நாளான இன்று (சனிக்கிழமை) இரவு அய்யா வைகுண்டசாமி பரங்கி நாற்காலியில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 3-ம் நாள் விழாவில் அய்யா அன்னவாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் அய்யா வலம் வரும் நிகழ்ச்சியும், 5-ம் நாள் பச்சை சாத்தி சப்பரவாகனத்தில் பவனியும், 6-ம் நாள் கற்பக வாகன பவனியும், 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகன பவனியும் நடைபெறுகிறது.

வருகிற 26-ந் தேதி மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து கிராமங்களுக்கு சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தேரோட்டம்

தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சியும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும். 29-ந் தேதி மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

விழா நாட்களில் தினமும் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமைப்பதி முன்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.


Next Story