திருச்செந்தூரில் ஆவணி திருவிழாவில்சுவாமி வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா
திருச்செந்தூரில் ஆவணி திருவிழாவில் சுவாமி வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழாவின் 4-ம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
ஆவணி திருவிழா
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
4-ம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துகிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
மாலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இன்று, குடவருவாயில் தீபாராதனை
5-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் சுவாமி குமரவிடங்க பெருமானும், வள்ளி அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.