அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா


அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா
x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்:

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆவணி திருவிழா கொடியேற்றம்

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு சிறப்பு பணிவிடை, 5.30 மணிக்கு கொடிபட்டம் தயாரிக்கப்பட்டு பதியை சுற்றி வலம் வருதல், காலை 6 மணிக்கு கொடியேற்றம் ஆகியவை நடந்தது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் குரு ஏ.சுவாமி தலைமையில் கொடியை குரு ஏ.ராஜசேகரன் ஏற்றி வைத்தார். குரு ஏ.தங்கபாண்டியன், வக்கீல் ஆனந்த், பொறியாளர் அரவிந்த், வக்கீல் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்து பள்ளியறை பணிவிடைகளை செய்தனர். நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வருதல் ஆகியவை நடந்தது. இந்த விழா 11 நாட்கள் நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் தலைமைப்பதி முன்பு அன்னதானம் மற்றும் காலை, மாலையில் பணிவிடை, மதியம் உச்சிபடிப்பு, இரவு வாகன பவனி, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.

கலிவேட்டை நிகழ்ச்சி

வருகிற 25-ந் தேதி மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சி அளித்தல், அன்னதானம் ஆகியவையும், 26-ந்தேதி இரவு 9 மணிக்கு அனுமன் வாகனத்திலும், 27-ந்்தேதி நள்ளிரவு 12 மணிக்கு இந்திர வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

தேரோட்டம்

விழாவின் இறுதிநாளான 28-ந்தேதி பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வருதல் நடைபெறுகிறது.


Next Story