அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: காளைகள்-மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் பதிவு மும்முரம்
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு பணி மும்முரமாக நடந்து வருகிறது.
அலங்காநல்லூர்,
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு பணி மும்முரமாக நடந்து வருகிறது.
ஆன்லைன் முன்பதிவு
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் 15-ந் தேதியும், பாலமேட்டில் 16-ந் தேதியும், அலங்காநல்லூரில் 17-ந் தேதியும் ஜல்லிகட்டு நடைபெற இருக்கிறது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. இதில் பங்கேற்கும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.
அந்தந்த பகுதிகளில் உள்ள இ-சேவை மையங்களில் வீரர்கள், காளைகள் madurai.nic.in என்ற இணையதள முகவரியில் நேற்று முதல் பதிவு செய்ய தொடங்கினர். 12-ந் தேதி மாலை 5 மணி வரை முன்பதிவு நடக்கிறது.
மாடுபிடி வீரர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை இணைக்க வேண்டும். முழு முகவரி, ஆதார் எண் இணைத்து வீரர்கள் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
முன் பதிவு
மேலும் காளையின் உரிமையாளர், ஒரு உதவியாளர் என இருவரும் காளையை அழைத்து வரலாம். அவர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை இணைக்க வேண்டும். அதனுடன் காளைகளுக்கு கால்நடை துறை சார்பில் வாங்கிய மருத்துவ பரிசோதனை சான்றிதழை இணைத்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மாடுபிடி வீரர், காளைகள், மேற்கண்ட 3 ஜல்லிக்கட்டுகளில் ஏதாவது ஒரு போட்டியில் மட்டுமே முன்பதிவு செய்து, கலந்து கொள்ள வேண்டும் என மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்பதிவு செய்தவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு ஆன்லைன் முறையில் டோக்கன் வழங்கப்படும். மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் டோக்கனை பதிவிறக்கம் செய்து ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளலாம்.