நெல்லை மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு
நெல்லை மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? என்பது பற்றி அதிகாரி விளக்கம் அளித்தார்.
நெல்லை மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? என்பது பற்றி அதிகாரி விளக்கம் அளித்தார்.
பால் தட்டுப்பாடு
நெல்லை மாவட்ட ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் நெல்லை ரெட்டியார்பட்டியில் இயங்கி வருகிறது. இங்கிருந்து தான் நெல்லை மாவட்டம், தென்காசி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் ஆகிய பகுதிகளுக்கு பால் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக நெல்லை மாவட்ட ஆவினில் பால் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக ஆவின் முகவர்களுக்கு பாதி அளவே பால் சப்ளை செய்யப்படுவதாகவும், கடந்த சில தினங்களாக 1 லிட்டர் பாக்கெட் பால் சப்ளை செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
அதிகாரி விளக்கம்
இதுகுறித்து ஆவின் பால் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை ஒருங்கிணைத்து முன்பு நெல்லை ஆவின் என்ற பெயரில் பால்பண்ணை இயங்கி வந்தது. தற்போது நெல்லையை தனியாகவும், தூத்துக்குடியை தனியாவும் பிரித்து நெல்லை, தூத்துக்குடியில் தனித்தனியாக ஆவின் பால் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இப்படி பால் பண்ணைகளை பிரித்தபோது சில நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பால் கொள்முதலில் சில பிரச்சினை ஏற்பட்டது.
விற்பனை அதிகம்
தற்போது நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் லிட்டர் பால், தூத்துக்குடி மாவட்டத்தில் 34 ஆயிரம் லிட்டர் பால் என மொத்தம் 74 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 85 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் விற்பனையாகிறது.
10 ஆயிரம் லிட்டருக்கு மேல் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.