அவினாசி அரசு தொடக்கப்பள்ளி முன்பு பெற்றோருடன் மாணவ-மாணவிகள் தர்ணா


அவினாசி அரசு தொடக்கப்பள்ளி முன்பு பெற்றோருடன் மாணவ-மாணவிகள் தர்ணா
x
திருப்பூர்


போதிய ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து அவினாசி அரசு தொடக்கப்பள்ளி முன்பு மாணவ, மாணவிகள், பெற்றோர் பதாகைகளை கையில் ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்கள் பற்றாக்குறை

திருப்பூர் மாவட்டம் அவினாசி போலீஸ் நிலையம் அருகில் அரசு தொடக்கப்பள்ளி கடந்த 80 ஆண்டுகளாக செயல்படுகிறது. தற்போது 5-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 187 மாணவர்கள், 172 மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாததால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக கூறி நேற்று காலை பள்ளி முன்பு மாணவ, மாணவிகளுடன் பெற்றோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:-

5-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் குழந்தைகளுக்கு சரிவர பாடம் கற்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குழந்தைகளின் கல்வி பாதிப்பு

இந்த நிலையில் இப்பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தொடக்கக்கல்வி அலுவலகம், உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் பல முறை கோரிக்கை மனு கொடுத்த பின்பு 2 பொறுப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஆனால் அவர்கள் வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே வருகிறார்கள். இதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. இப்பள்ளிக்கு 11 ஆசிரியர்கள் நியமிக்க வேண்டிய நிலையில் 3 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். எனவே போதிய அளவு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேச்சுவார்த்தை

தகவலறிந்ததும் அவினாசி போலீஸ் துணை சூப்பிரண்டு பவுல்ராஜ், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மகேஸ்வரி, சுமதி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மாணவ-மாணவிகளின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது பற்றி பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரை செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும், தற்போது உள்ள பொறுப்பு ஆசிரியர்கள் தொடர்ந்து இங்கு பணிபுரிய உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் உறுதி கூறினார். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மாணவ-மாணவிகள் வகுப்பறைகளுக்கு சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story