குழாய் உடைந்து சீறிப்பாய்ந்து வீணான குடிநீர்
அவினாசி மற்றும் திருப்பூர் குடிநீர் தேவைக்காக 4-வது குடிநீர் திட்டம் மூலம் பவானி ஆற்றிலிருந்து குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் குடிநீர் வழங்குவதற்காக நேற்று இரவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது அதிக உயர் அழுத்தம் காரணமாக அவினாசி கிழக்கு ரத வீதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஊற்று போல 40 அடி உயரத்திற்கு தண்ணீர் சீறிப்பாய்ந்ததால் அப்பகுதியில் அருகில் இருந்த வீடு மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதுகுறித்து உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கும், குடிநீர் திறப்பாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அவினாசி பேரூராட்சி நிர்வாகத்தினர் விரைந்து வந்து ஏர்வால்வு திறக்கப்பட்டு தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.