ஆறுகளில் இறங்கி குளிப்பதை தவிர்க்க வேண்டும்
ஆறுகளில் இறங்கி குளிப்பதை தவிர்க்க வேண்டும்
குறுவை பாசனத்துக்கு தண்ணீர் அதிக அளவு திறக்கப்பட்டுள்ளதால் ஆறுகளில் இறங்கி குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மரக்கன்று நடும் பணி
தஞ்சை மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தஞ்சை மாவட்ட நிர்வாகம், மாவட்ட பசுமைக்குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை கல்லூரிகள், பொது இடங்களில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
25 ஆயிரம் மரக்கன்றுகள்
தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளில் ஜூனியர் ரெட்கிராஸ், நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய பசுமைப்படை, தேசிய மாணவர் படை, சாரண, சாரணியர் இயக்கம் என 1000 குழுக்கள் செயல்பட்டு வருகிறது. முதல் கட்டமாக ஒரு குழுவுக்கு 25 மரக்கன்றுகள் வீதம் 25 ஆயிரம் மரக்கன்றுகள் ஒரு மாதத்திற்குள் நட்டு பராமரித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சிவக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், செயலாளர் ராம்.மனோகர், இணை செயலாளர் முத்துக்குமார், ரெட்கிராஸ் தலைவர் ராஜமாணிக்கம், பேராசிரியர் சுகுமார், ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் பிரகதீஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆறுகளில் குளிக்க வேண்டாம்
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குறுவை பாசனத்துக்காக ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆறுகளில் இறங்கி குளிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். சுற்றுலா வருபவர்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் ஆறுகளின் கரைகளில் நின்று கொண்டு விபரீத விளையாட்டுகளிலோ, இறங்கி குளிப்பதோ போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.
ஆபத்தை உணராமல் இறங்குவதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுகின்றன. எனவே இது போன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் ஆறுகளில் தண்ணீர் அதிகமாக செல்வதால் இறங்கி குளிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.