மதிய நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்
கோடை வெயிலில் இருந்து காத்துக்கொள்ள மதிய நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என திருப்பத்தூர்மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கோடை வெயில்
தமிழகத்தில் தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த வெயில் காலங்களில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும். இதற்காக அடர்த்தியான வண்ண துணிகளை பயன்படுத்துவதை தவிர்த்து கதர் ஆடைகள் அணிவது சிறப்பாக இருக்கும். வெளியில் சென்று வீட்டிற்கு வந்தவுடன் குளிர்ந்த நீரை அல்லது குளிர் பானத்தை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெயிலில் செல்வதால் தோல் நோய்கள் வர வாய்ப்புள்ளது. மேலும், இணை நோய்களான ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் உச்சி வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
தனிமை படுத்திக்கொள்ள வேண்டும்
ஒருவர் சராசரியாக குறைந்தபட்சம் 4 முதல் 5 லிட்டர் குடிநீர் அருந்த வேண்டும். கேன்களில் அடைக்கப்பட்டிருக்கும் குடிநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற வெயில் காலங்களில் அம்மை மற்றும் தட்டமை நோய்கள் வர வாய்ப்புள்ளது. எனவே, தடுப்பூசி முறையாக செலுத்திக் கொள்வது அவசியம். மாணவர்களுக்கு தட்டம்மை மற்றும் அம்மை நோய் ஏற்பட்டால் தேர்வு நேரங்களில் தனி அறையில் அமர்ந்து தேர்வெழுத ஏற்பாடு செய்ய வேண்டும்.
அம்மை நோய் அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம். அடைக்கப்பட்ட குளிர்பானங்களை அருந்துவதை தவிர்த்து, பழரசங்களை அருந்துவது வெயில் காலத்திற்கு உகந்ததாகும். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் அனைத்து நோய்களுக்கும் தேவையான மருந்து, மாத்திரைகள் கையிருப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.