அவசர வேலையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்


அவசர வேலையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்
x

வெயில் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ள அவசர வேலையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தி உள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சார்பில், கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நோய்கள் தாக்கும்

தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. வெயில்காலங்களில் ஏற்படும் நோய்கள் அதாவது, தோல் எரிச்சல், சின்னம்மை, தட்டம்மை, வெப்ப பக்கவாதம், மயக்கம் போன்ற நோய்கள் தாக்ககூடும். பொதுமக்கள் அனைவரும் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.

தேவைக்கேற்ப அடிக்கடி நீர் பருக வேண்டும். பழங்கள், இளநீர், பழச்சாறு, மோர், ஓ.ஆர்.எஸ். கரைசல் போன்ற நீர் ஆகாரங்களை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். வெளியே செல்லும் போது தவறாமல் குடிநீர் எடுத்து செல்ல வேண்டும். வெளிர் காற்றோட்டமான பருத்தி உடைகளை அணிய வேண்டும். குடை, துண்டு பயன்படுத்த வேண்டும்.

தவிர்க்க வேண்டும்

வெயிலின் தாக்க அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மதியம் 12 மணி முதல் 3 மணிவரை அவசர வேலையின்றி வெளியே செல்லக் கூடாது. கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்கள், மற்றும் நாள்பட்ட நோய்பாதிப்பு உள்ளவர்கள் தேவையின்றி வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். தேநீர், காபி, குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story