பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள், வணிக நிறுவனங்களுக்கு கலெக்டர் பழனி அறிவுரை கூறியுள்ளார்
விழுப்புரம்
ஆய்வுக்கூட்டம்
நெகிழி மாசில்லா தமிழ்நாடு உருவாக்குதல் குறித்து விழுப்புரம் மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வது, சேமிப்பது, விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவதை தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது. அவ்வாறு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஏற்கனவே மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் மூடப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மஞ்சப்பை எடுப்போம்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக 14 வகையான இயற்கையோடு இணைந்த மாற்றுப்பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த தக்க நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக பிளாஸ்டிக் கேரி பேக்குகளுக்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பை எடுப்போம் என்ற உறுதியுடன் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ள நிறுவனங்களில் சோதனைகள் மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்யவும் அபராதம் விதிக்கவும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அமைப்புகளில் ஏற்கனவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பணிக்குழு அமைத்து
இதை தீவிரமாக அமல்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு மாவட்ட அளவிலான பணிக்குழுவினை அமைத்து மாதம் ஒருமுறைகூடி இதன் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அரசு அறிக்கை அளிக்க அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 2022 ஜனவரி முதல் கடந்த மார்ச் மாதம் வரை 3,334 கடைகளில் 38,854 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.8 லட்சத்து 10 ஆயிரத்து 650 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நெகிழியில்லா தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வக்குமார், முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், நகராட்சி ஆணையர்கள் சுரேந்திரஷா, மங்கையர்கரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.