கடலூா் மாவட்டத்தில் சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் வர்த்தக நிறுவனங்களுக்கு விருதுகலெக்டர் தகவல்


கடலூா் மாவட்டத்தில் சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் வர்த்தக நிறுவனங்களுக்கு விருதுகலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 14 Jan 2023 1:23 AM IST (Updated: 14 Jan 2023 4:11 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் வர்த்தக நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படும் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கடலூர்

தனியார், பொதுத்துறை மற்றும் கூட்டுத்துறை நிறுவனங்களை சேர்ந்த தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்களது சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் பல்வேறு சமூகப் பொருளாதார மேம்பாட்டுப் பணிகளில் பாராட்டத்தக்க வகையில் ஈடுபடுவதை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் விருது வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த விருதானது 2022-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும். ரூ.1 லட்சம் பரிசுத்தொகையும், நற்சான்றிதழும் கொண்ட இவ்விருது ஒவ்வொரு வருடமும் மாவட்டத்திற்கு ஒரு விருது வீதம் 37 மாவட்டங்களிலும் சிறப்பாகப் பணி செய்த தலைசிறந்த தொழில் மற்றும் சிறந்த வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

விருதுக்கு தகுதி இல்லை

பங்கு நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் தனிநபர் நிறுவனங்கள், அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள், தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்புகள் இவ்விருதை பெற விண்ணப்பிக்கலாம். இந்நிறுவனங்கள் நேரடியாகவோ, தங்களின் அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தங்களது இதர முகமைகள் மூலமாகவோ செயலாற்றலாம். தனித்துவமான அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மன்றங்கள், சங்கங்கள் இவ்விருது பெற தகுதியற்றவை.

மேற்கண்ட நிறுவனங்களால் ஊரகப் பகுதிகளில் அந்தந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளே விருது வழங்குவதற்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும். விவசாயம், கால்நடை, கல்வி, பொதுச் சுகாதாரம், குடிநீர், மழைநீர் சேகரிப்பு, மரபு சாரா எரிசக்தி, வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல், சுய உதவிக் குழுக்கள் மற்றும் வாழ்வாதார மேம்பாடு, பெண்கள், குழந்தைகள், இளைஞர் நலன், மரக்கன்றுகள் நடுதல் ஆகிய சேவைகளில் சிறப்பாக பங்கேற்கும் நிறுவனங்கள் விருதுக்கு பரிசீலிக்கப்படும்.

விண்ணப்பம்

மேலும் பல்வேறு சமூக நல மேம்பாட்டுப் பணிகளும் விருது வழங்குவதற்கு பரிசீலிக்கப்படும். நிறுவனங்களின் கடந்த ஒரு நிதியாண்டின் செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இவ்விருதுக்கு தேவையான விண்ணப்பம்www.tnrd.tn.gov.inஎன்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, தகுதிவாய்ந்த நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை இணையதள வழி மூலமாக மட்டும் தகுந்த ஆவணங்களுடன் இணைய தளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்ட 45 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள இவ்விருதை பெற தகுதியான தொழில் சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் விண்ணப்பம் செய்ய முன் வர வேண்டும்.

மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story