பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்த வேதாரண்யம் பெண்ணுக்கு விருது
1,500-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்த வேதாரண்யம் பெண்ணுக்கு தமிழக அரசு சார்பில் இன்று சுதந்திர தினவிழாவில் விருது வழங்கப்படுகிறது.
வேதாரண்யம்:
1,500-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்த வேதாரண்யம் பெண்ணுக்கு தமிழக அரசு சார்பில் இன்று சுதந்திர தினவிழாவில் விருது வழங்கப்படுகிறது.
பாரம்பரிய நெல் ரகங்கள்
தமிழகத்தில் நம்மாழ்வார் வழியை பின்பற்றி மீட்டெடுக்கப்பட்ட நெல் ஜெயராமனின் பாரம்பரிய நெல் ரகங்களை தமிழக அரசு அங்கீகரித்துள்ளது. அவர்களது வழியை பின்பற்றி நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் கிராமத்தை சேர்ந்த சிவரஞ்சனி சரவணக்குமார் என்பவர் 1,525 பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்தும், அவற்றை பயிரிட்டும் அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.இதற்காக சிவரஞ்சனி-சரவணகுமார் தம்பதியினர் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சென்று மருத்துவ குணம் கொண்ட பாரம்பரியமிக்க 1,525 வகையான நெல் ரகங்களை மீட்டெடுத்துள்ளனர்.
அதனை தங்களுக்கு சொந்தமான 1½ ஏக்கர் விளை நிலத்தில் பாத்திகள் அமைத்து அவற்றை அடையாளப்படுத்தி ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு வகையான நெல்மணிகளை விதைத்து அதனை பாதுகாத்து வருகின்றனர். அதற்கான அறுவடை முடிந்ததும் அந்த நெல் ரகங்களை பதப்படுத்தி தனித்தனி கண்ணாடி குடுவைகளில் அடைத்து அதன் மருத்துவ குணங்களை பொதுமக்கள் மற்றும் பிற விவசாயிகள் அறியும் வண்ணம் காட்சிப்படுத்தியும் வைத்துள்ளனர்.
தமிழக அரசு விருது
இந்தப்பணியை லாபநோக்கமின்றி சேவை மனப்பான்மையுடன் அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களது மீட்டெடுப்புகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு சிவரஞ்சனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இதற்கான விருதை இன்று(திங்கட்கிழமை) நடக்கும் சுதந்திர தினவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து சிவரஞ்சனி பெறுகிறார். அப்போது அவருக்கு விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என்று தெரிகிறது. முதல்-அமைச்சரிடம் விருது பெற உள்ள சிவரஞ்சனியை விவசாயிகள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.