திரைப்படங்கள், சின்னத்திரை போல குறும்படங்களுக்கும் விருதுகள் -அமைச்சர் சாமிநாதன் தகவல்
குறும்படங்களுக்கு விருது வழங்க பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
சென்னை,
சட்டசபையில் கேள்வி நேரத்தில் தி.மு.க. உறுப்பினர் எழிலரசன் (காஞ்சீபுரம்), 'திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் எப்போது வழங்கப்படும்?' என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பதில் அளித்து கூறியதாவது:-
கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014 வரை வழங்கப்படாமல் இருந்த திரைப்பட விருதுகள் 314 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விருதாளர்களை தேர்வு செய்வதற்கு தேர்வு குழு அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குறும்படத்திற்கு...
தொடர்ந்து பேசிய தி.மு.க. உறுப்பினர் எழிலரசன், 'திரைப்பட கலைஞர்கள் மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுவது போல பல்வேறு சமூக சிந்தனைகளை விதைத்து வரும் குறும்படங்களுக்கும் அரசு விருது வழங்க வேண்டும் என்றும், திரைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெயரில் கருணாநிதி நூற்றாண்டு விருது வழங்க வேண்டும்' என்றும் வலியுறுத்தினார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் சாமிநாதன், 'திரைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு கருணாநிதி பெயரில் வித்தகர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது தொடர்ந்து வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். எனவே இந்த விருது தொடர்ந்து வழங்கப்படும்.
அதே நேரத்தில் உறுப்பினர் எழிலரசன் வழங்கிய ஆலோசனைகளை முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று குறும்படங்களுக்கு விருது வழங்க பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நிதி நிலைக்கேற்ப படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.