மின்வேலி அமைப்பதை தடுக்க விழிப்புணர்வு
மேட்டூர் பகுதியில் வனப்பகுதியையொட்டி மின்வேலி அமைப்பதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மின்வாரியம் சார்பில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
மேட்டூர்
வனப்பகுதியையொட்டி மின்வேலி அமைப்பதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மின்வாரியம் சார்பில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
வனவிலங்குகள் உயிரிழப்பு
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் வனப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளில் சிக்கி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி உயிரிழந்து வருகின்றன. இதனால் வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளில் மின்வேலி அமைக்க கூடாது என்பது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மின்வாரியம் முடிவு செய்தது.
இதன் அடிப்படையில் மேட்டூர் வனச்சரகத்தை சேர்ந்த பெரிய தண்டா, கிமான் காடு, நீதிபுரம், மேட்டு கொட்டாய், சின்னத்தண்டா, கார் காடு ஆகிய கிராமங்களிலும், வட பர்கூர்காப்புக்காடு மற்றும் பாலமலை காப்புக்காடு எல்லையை ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களில் மின்வேலி அமைக்க கூடாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன.
அதிகாரிகள் ஆய்வு
மேலும் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதா என வீடுகளில் உள்ள மின்இணைப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் மின்வேலி அமைப்பது தண்டனைக்குரிய குற்றம் என விவசாயிகளிடம் அறிவுறுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மேட்டூர் வட்ட மேற்பார்வை பொறியாளர் தண்டபாணி, மேட்டூர் செயற்பொறியாளர் சாந்தி, கொளத்தூர் உதவி செயற்பொறியாளர்கள் மயில்சாமி, செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் வனப்பகுதியையொட்டி மின்வேலி அமைக்க கூடாது என மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.