மதுரை கோட்ட ரெயில்வே சார்பில் ரெயில்வே கேட்டை கடப்பது குறித்த விழிப்புணர்வு


மதுரை கோட்ட ரெயில்வே சார்பில் ரெயில்வே கேட்டை கடப்பது குறித்த விழிப்புணர்வு
x

மதுரை கோட்ட ரெயில்வே சார்பில் ரெயில்வே கேட்டை கடப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

மதுரை


சர்வதேச லெவல் கிராசிங் தினம் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 17-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. மதுரை கோட்ட ரெயில்வே சார்பில், கோட்டத்துக்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கேரள மாநிலம் கொல்லம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ரெயில் நிலையங்கள், முக்கிய ரெயில்வே கேட்டுகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. மதுரையில் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கோட்ட மேலாளர் அனந்த் கொடியசைத்து தொடங்கிவைத்தார். அப்போது, ரெயில் பாதையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரெயில்வே கேட்டுகள், ஆளில்லாத ரெயில்வே கேட்டுகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் ரெயில்வே கேட்டுகளின் மீது மோதி விபத்து ஏற்படுகின்றன. இதை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு ரெயில்வே கிராசிங்கிலும் வேகத்தடை, ஆளில்லாத ரெயில்வே கேட் என்பதை காட்டும் பலகைகள், வண்ண ஸ்டிக்கர்கள், ஒலி எழுப்புதல் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்தையும் தாண்டி விபத்தை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இதற்கு ஒரு வருடம் முதல் 5 வருடங்கள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அத்துடன், பஸ் நிலையங்கள், பெட்ரோல் பங்குகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் மதுரை கோட்ட ரெயில்வே முதுநிலை பாதுகாப்பு அலுவலர் முகைதீன் பிச்சை தலைமையிலான அலுவலர்கள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். முன்னதாக மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் டிரைவிங் லைசென்சுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு ரெயில்வே லெவல் கிராசிங்குகளை கடப்பது குறித்த விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. விழிப்புணர்வு பிரசாரமும் ரெயில்வே அலுவலர்கள் மூலம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் சிங்காரவேலு, மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் உள்ளிட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story