செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து விழிப்புணர்வு
முதுகுளத்தூர் பகுதியில் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று அதிகாரி கூறினார்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் பகுதியில் ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்பட்ட ரேஷன் அரிசியில் வெண்மை நிறத்தில் அரிசி கலந்து இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அந்த அரிசியில் தண்ணீரை ஊற்றினர். அதில் வெண்மை நிறத்திலான அரிசி தண்ணீருக்கு மேலே வந்தன. இதை செல்போனில் வீடியோவாக எடுத்து அதிகாரிகளிடம் புகார் செய்தனர். சமூக வலைத்தளங்களிலும் கலப்பட ேரஷன் அரிசி வினியோகித்ததாக தகவல்கள் பரவின.
இது குறித்து முதுகுளத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கதிரவனிடம் கேட்டபோது, தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 2 மாவட்டங்களில் மட்டுமே சோதனை அடிப்படையில் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வினிேயாகிக்கப்படுகிறது. இதை சமைத்து சாப்பிடுவதால் எந்த ஒரு உபாதைகளும் ஏற்படாது. ரத்தசோகை, கருச்சிதைவு ஏற்படாது. இந்த அரிசியை முதலில் வெந்நீரில் நன்கு அலசி அதன்பிறகு சமைத்து சாப்பிட வேண்டும். பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.