இணையவழியை பாதுகாப்புடன் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு
இணையவழியை பாதுகாப்புடன் பயன்படுத்துவது குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் உத்தரவின் பேரில், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி அறிவுறுத்தலின் படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி இணையவழியை பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு வாரம் வருகிற 10-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுபதியாக நாட்டறம்பள்ளி அருகே அக்ராவரம் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் முன்னிலை வகித்தார்.
இதில் திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரேமா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பள்ளி தலைமை ஆசிரிய, ஆசிரியைகள், மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பாதுகாப்பாக இணையவழியை பயன்படுத்துவது பற்றி விளக்கப்பட்டது.
இதேபோன்று ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் இணையவழியை எவ்வாறு பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி கலந்து கொண்டு இன்றைய காலக்கட்டத்தில் அதிகமானோர் செல்போனை பயன்படுத்துகின்றனர். இதனை பள்ளி மாணவர்களாகிய நீங்கள் வீட்டிற்கு சென்றவுடன் செல்போனில் இணையதளத்தில் பல்வேறு ஆப்களை டவுன்லோடு செய்வது, தேவையற்ற பதிவுகளை பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வங்கியில் இருந்து பேசுவதாக அடிக்கடி போன் செய்வார்கள். எந்த ஒரு வங்கியும் நம்மை தேடி வந்து உதவி செய்யாது. தெரியாத நபரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறி ரகசிய நம்பரை தெரிவிக்கக்கூடாது'' என்றார்.
நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் காதர்கான், முதுநிலை காவலர் ரகுராம் உள்ளிட்ட பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.