போலீஸ் நிலையங்களில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
உலக பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தையொட்டி போலீஸ் நிலையங்களில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம்
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் துறை சார்பில் உலக பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்து வந்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதன்படி திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில நடந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் ஆயுதப்படை போலீசார் பயன்படுத்தும் துப்பாக்கிகள், கண்ணீர் புகை குண்டுகளை சுடுவதற்கு பயன்படுத்தும் துப்பாக்கி உள்பட 6 வகையான துப்பாக்கிகள் கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். அப்போது ஒவ்வொரு துப்பாக்கியும் செயல்படும் விதம் குறித்து போலீசார் விளக்கினர்.
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
அப்போது பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெண்ளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்டம், இளவயது திருமணத்தால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், ஆன்லைன் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதேபோல் போலீஸ் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது. அப்போது போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அறை, சப்-இன்ஸ்பெக்டர் அறை, எழுத்தர் அமரும் இடம், லாக்கப் ஆகியவற்றை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பார்த்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் உலகநாதன், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நத்தம், குஜிலியம்பாறை
நத்தம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள், குழந்தைகளுக்கான உரிமைகள், பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் போக்சோ சட்டம், பொதுமக்கள்-போலீஸ் நல்லுறவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முன்னதாக போலீஸ் நிலையத்துக்கு வந்த மாணவிகளுக்கு ரோஜா பூக்கள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் சப். இன்ஸ்பெக்டர் சுசிலா, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள், பாண்டியராஜ் மற்றும் போலீசார், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்தில் நடந்த முகாமுக்கு குஜிலியம்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமை தாங்கினார். இதில் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாக நேரிடும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது? என்பது குறித்து விளக்கி கூறப்பட்டது.
சத்திரப்பட்டி, பழனி
சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் கவிதா (பொறுப்பு) தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பாலியல் வன்கொடுமையின் தீமைகள், அதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், பாலசுப்ரமணி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பஞ்சலட்சுமி தலைமையிலான போலீசார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது பாலியல் ரீதியான பிரச்சினைகள், அதனை கையாளும் விதம், பெண்கள், குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அடிவாரம் போலீஸ்நிலையத்தில் பழனியாண்டவர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கும், சாமிநாதபுரம் போலீஸ் நிலையத்தில் வயலூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இன்ஸ்பெக்டர் இருக்கையில் மாணவிகள்
திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்திலும் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாணவிகளிடம் எதிர்காலம் திட்டம் குறித்து கேட்ட அறிந்ததோடு, அச்சமின்றி பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் பாலாண்டி அறிவுரை கூறினார். மேலும் இன்ஸ்பெக்டர் தனது இருக்கையில் மாணவிகளை அமர வைத்து உற்சாகப்படுத்தினார்.