குஞ்சப்பனை அரசு பள்ளியில் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
குஞ்சப்பனை அரசு பள்ளியில் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோத்தகிரி
குஞ்சப்பனை அரசு பள்ளியில் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழிப்புணர்வு
காவல்துறை சார்பில் கோத்தகிரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் போக்சோ சட்டம் குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி அருகே உள்ள பழங்குடியின கிராமமான குஞ்சப்பனையில் அரசு உண்டு உறைவிடப் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வினுதாஸ் தலைமை வகித்தார். கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சிறப்பு புலனாய்வு பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ், ஏட்டு ஜேக்கப் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.
போக்சோ சட்டம்
இதில் பெண் குழந்தைகள் பாலியல் சீண்டல்களில் இருந்து எப்படி தங்களை தற்காத்துக்கொள்வது, பாலியல் சீண்டல்கள் நடந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும், இலவச அழைப்பு எண்கள் மூலம் புகார் செய்வது குறித்தும், போக்சோ சட்டத்தின் விதிமுறைகள், இளம் வயதில் திருமணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள், குழந்தை திருமணம் செய்து வைப்பவர்களுக்கு கிடைக்கும் தண்டனைகள், சமூக வலைதளங்களை மாணவ, மாணவிகள் எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் எனவும், 18 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டால் அவர்கள் மீது போக்சோ சட்டம் பாயும் என்பது குறித்து விளக்கப்பட்டது.
தீமைகள்
மேலும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள், உடல் நலம் கெடுதல், கல்வியில் பின் தங்குவது, நினைவுத் திறன் பாதிப்பு, குற்றச்செயல்களில் ஈடுபட தூண்டுவது உள்ளிட்ட தீமைகள் ஏற்படுகின்றன. எனவே போதைப் பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.