செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரான உணவை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரான உணவை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரான உணவை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கி செறிவூட்டப்பட்ட அரிசியால் செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், லெமன் சாதம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தார்.
இது குறித்து திருவண்ணாமலை நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் தேன்மொழி கூறுகையில், ''திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே சத்துணவு குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு செறிவூட்டப்பட்ட அரிசி, அயோடின் கலந்த உப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் வழங்கப்பட்டு வருகின்றது. வைட்டமின், நுண் ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை ஏழை எளியோர் வாங்கி பயன்படுத்தாத நிலையில் உள்ளதால் சாதாரண அரிசியில் வைட்டமின்களான போலிக் அமிலம், இரும்பு சத்து, நுண் ஊட்டச்சத்துக்களை கலந்த செறிவூட்டல் என்னும் சத்து அரிசியை தமிழக அரசு வழங்க உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் 7 லட்சத்து 87 ஆயிரத்து 4 ரேஷன் அட்டைகளுக்கு சத்து நிறைந்த செறிவூட்டல் அரிசி விரைவில் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது'' என்றார்.
நிகழ்ச்சியில் தரக்கட்டுப்பாட்டு மேலாளர் அரங்கநாதன், உதவி மேலாளர் முருகன் மற்றும் கிடங்கு பொறுப்பாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.