குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு பிரசாரம்


குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு பிரசாரம்
x

சிவகாசியில் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

தமிழக அரசு உத்தரவுப்படி நகரங்களின் தூய்மையை மேம்படுத்தும் பொருட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் என்ற அமைப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த அமைப்பு ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறது. இதில் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் என்று விழிப்புணர்வு செய்யப்படுகிறது. சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடைபெற்றது. இதில் சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் உள்ள சில வார்டு பகுதிகளில் மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், தன்னார்வ தொண்டர்கள், டெங்கு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் என பலர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் மூலம் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை சிமெண்டு ஆலைக்கு எரிபொருளாக அனுப்பி வைத்து சிவகாசி மாநகராட்சி பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாத மாநகராட்சியாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட 28-வது வார்டு பகுதியில் உள்ளவர்களிடம் கவுன்சிலர் வெயில் ராஜ் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



Next Story