பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க விழிப்புணர்வு போட்டிகள் நடத்த வேண்டும்
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க விழிப்புணர்வு போட்டிகள் நடத்த வேண்டும் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசினார்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. விழிப்புணர்வு சுவரொட்டிகளையும் கலெக்டர் வெளியிட்டார்.
பின்னர் அவர் பேசுகையில், குழந்தை திருமணம், குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை என பாலின அடிப்படையிலான வன்முறை தனிநபர் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியை தடை செய்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசாரம் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரசாரம் சர்வதேச மனித ஒற்றுமை தினமான வருகிற 23-ந் தேதி அன்று நிறைவு பெறுகிறது.
மேலும் ஊராட்சி, வட்டார அளவிலும் பள்ளி மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு போட்டிகள், ஊர்வலம், கருத்தரங்குகள் நடத்த வேண்டும் என்றார்.
இதில் மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்குமரன், சமூக நல அலுவலர் கோமதி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமாமகேஷ்வரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.