'ஹெல்மெட்' விழிப்புணர்வு குறும்படம்
மயிலாடுதுறையில் ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு குறும்படத்தை போலீஸ் சூப்பிரண்டு நிஷா வெளியிட்டார்.
மயிலாடுதுறை மாவட்ட திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் நல சங்கத்தின் சார்பில் பொது மக்கள் நலன் கருதி சாலை விபத்து பாதுகாப்பு, 'ஹெல்மெட்' அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கருத்தை அடிப்படையாகக் கொண்டு 'அலட்சியம்' எனும் பெயரில் குறும்படம் தயாரிக்கப்பட்டது. இந்த குறும்படத்தை மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்வையிட்டார். பின்னர் குறும்படத்தை தயாரித்த குழுவினரை பாராட்டி, அதன் குறுந்தகட்டை (சி.டி.) வெளியிட்டார். அதனை சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் பெற்றுக் கொண்டார். இந்த குறும்படத்தை மயிலாடுதுறை ஆர்.ஆர்.பாபு இயக்கி உள்ளார். பூர்வீகா செந்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜனார்த்தனன், பண்ணை பாலு, சிவப்பிரகாசம், கோபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த குறும்படத்தினை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் ஒளிபரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.