திண்டுக்கல்லில் ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு
மதுரை தீ விபத்து எதிரொலியாக திண்டுக்கல்லில் ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மதுரை ரெயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா ரெயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் 9 பேர் தீயில் கருகி பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணையில், சுற்றுலா பெட்டியில் கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி சமைத்த போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்ததோடு, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து அனைத்து ரெயில்களிலும் தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்லாமல் தடுக்க சோதனை நடத்தும்படி ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி திண்டுக்கல் வழியாக செல்லும் ரெயில்களில் கோட்ட வர்த்தக ஆய்வாளர் சத்தியமூர்த்தி, திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமாரை கொண்ட குழுவினர் தினமும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ரெயில் பயணிகள் கொண்டு வரும் பைகளில் தீப்பற்றும் பொருட்கள் எடுத்து வரப்படுகிறதா? என்றும் நேற்று சோதனை நடத்தினர். மேலும் பட்டாசு, கியாஸ், பெட்ரோல் உள்பட தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே தீப்பற்றும் பொருட்களை ரெயிலில் எடுத்து செல்லக்கூடாது. அதேபோல் யாராவது தீப்பற்றும் பொருட்களை கொண்டு வந்தால் உடனே ரெயில்வே பாதுகாப்பு படை வீரரிடம் தெரிவிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.