திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஜெயமாலதி முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட தூய்மை பணியாளர்கள் திடக்கழிவு மேலாண்மை பற்றி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கியவாறும் சென்றனர். மேலும் அவர்கள் பெரம்பலூர் நகராட்சியை தூய்மையாக வைத்துக்கொள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டில் உருவாகும் மக்கும் குப்பைகளை பச்சை நிற தொட்டியிலும், மக்காத குப்பைகளை நீல நிற தொட்டியிலும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வீட்டு உபயோக குப்பைகளை தனியாகவும் சேகரித்து, அவற்றை தினசரி வீடு தோறும் வரும் நகராட்சி தூய்மை காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்தனர். ஊர்வலம் பாலக்கரை, வெங்கடேசபுரம், ரோவர் வளைவு, சங்குபேட்டை, கடைவீதி வழியாக சென்று பழைய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.