அரசுத்துறை அலுவலர்கள், உதவியாளர்களுக்கு வருமான வரி பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
அரசுத்துறை அலுவலர்கள், உதவியாளர்களுக்கு வருமான வரி பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி அறிவுறுத்தலின்படி புதுச்சேரி வருமான வரி இணை ஆணையர் அலுவலகம் மற்றும் விழுப்புரம் மாவட்ட கருவூல அலுவலகம் சார்பில் அனைத்துத்துறை சார்ந்த பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள், உதவியாளர்களுக்கு வருமான வரி பிடித்தம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அனைத்துத்துறை சார்ந்த பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள், உதவியாளர்களுக்கு இந்திய வருமான வரி சட்டத்தின்படி அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட வேண்டிய வரி தொடர்பான பிரிவுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அதேபோல் வருமானவரி பிடித்தம் செயல்பாட்டுக்கான காலாண்டுகள், அரையாண்டுகள் உரிய காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் அபராதம், வட்டி பிடித்தம் செய்வதிலிருந்து தவிர்க்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, மேலும் பணம் பெற்று வழங்குபவர்களுக்குரிய கடமைகள், பொறுப்புகள், பணிகள் ஆகியவை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் வருமான வரி பிடித்தம் செய்தவர், குறிப்பிட்ட காலத்திற்குள் அதனை மத்திய அரசின் கணக்கில் செலுத்த வேண்டிய கட்டாயத்தையும், காலாண்டு வருமான வரி அறிக்கையை உரிய காலத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியத்தையும், பிடித்தம் செய்யப்பட்ட வரிக்கான படிவம் 16-ஐ சம்பந்தப்பட்ட ஊழியருக்கு வழங்க வேண்டியதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட கருவூல அலுவலர் ராமச்சந்திரன், வருமான வரித்துறை அலுவலர்கள் கணேசன், சிற்றரசன், வருமான வரி ஆய்வாளர் தயாநிதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.