சமூக நலன்-மகளிர் உரிமைத்துறை சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ்


சமூக நலன்-மகளிர் உரிமைத்துறை சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ்
x

சமூக நலன்-மகளிர் உரிமைத்துறை சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ்

திருவாரூர்

திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலன்-மகளிர் உரிமைத்துறை சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

போக்சோ சட்டம்

பெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்று காலம் காலமாக பெருமிதமாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அந்த கண்கள் பிஞ்சுப் பருவத்திலேயே நசுக்கப்பட்டு, நரக வேதனைக்குள்ளாக்கப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனையானது.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருவதால் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சம் பெற்றோரிடம் ஏற்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளை பாலியல் தொல்லையில் பாதுகாக்கும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது.

18 வயதுக்குட்பட்டவர்கள் பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டாலோ, பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டாலோ இச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

பாலியல் தொல்லை அதிகரிப்பு

வளர் இளம் பருவத்தினரிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், ஆசை வார்த்தைகளை நம்பியும், காதல் வயப்பட்டு சீரழிவில் சிக்கிக்கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து உள்ளன.

இது பள்ளிப் பருவத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாததை காட்டுகிறது. மேலும் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லையும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு பாலியல் தொல்லைகள் கொடுப்பவர்கள் அவர்கள் ஆசைக்கு இணாங்காவிட்டால் கொலை செய்துவிடுவோம் என்பன உள்ளிட்ட மிரட்டல்களையும் விடுத்து வருகின்றனர்.

இதனால் பெரும்பாலான பாலியல் பிரச்சினைகள் குறித்த புகார்கள் வெளியில் தெரிவதில்லை.

எனவே கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளிலும் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், சட்டங்கள்- தண்டனைகள் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

விழிப்புணர்வு நோட்டீஸ்

அதன்படி திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பாதுகாப்பான பணி சூழல் நோக்கி பெண்கள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

அதில், பெண்கள் பணியாற்றும் நிறுவனத்தில் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள இடங்களில் உள்ளக புகார் குழுக்கள் (ஐ.சி.சி.) அமைக்க வேண்டும். 10-க்கும் குறைவான பணியாளர்கள் பணியாற்றினால் மாவட்டதோறும் கலெக்டரால் உள்ளூர் புகார் குழுக்கள் அமைப்பட்டுள்ளன.

181 இலவச எண்

இந்த விதிமுறைகளை பின்பற்ற தவறும் நிறுவனங்களின் உரிமம் மற்றும் பதிவு ரத்து செய்யப்படும். பெண்கள் உரிமைகள் மற்றும் விருப்பங்களை பற்றி தெரிந்து கொள்வதற்காக 181 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் பிரச்சினை குறித்து தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story