மக்கள் நீதிமன்றம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
சேலம் மாவட்ட சமரசம் மற்றும் தீர்வு மையம் சார்பில் மக்கள் நீதிமன்றம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று மாலை ஊர்வலம் நடந்தது. சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலத்தில், சார்பு நீதிபதி தங்கராஜ், குடும்ப நல நீதிபதி ஜெயஸ்ரீ, வக்கீல் சங்க தலைவர் முத்துசாமி, ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதி ரெய்க்கானா பர்வீன் உள்பட, மாவட்ட நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மக்கள் நீதிமன்றம் குறித்தும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்த வாசங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு சென்றனர். கோர்ட்டு வளாகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா வரை சென்று மீண்டும் கோர்ட்டில் நிறைவடைந்தது.
முன்னதாக மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி பேசுகையில், இந்தியாவில் சமரசம் குறித்த பார்வை என்பது இதிகாச புராண கதைகளிலும், பண்டைய வேத சாஸ்திர நூல்களிலும், பின்வந்த மன்னராட்சி காலத்திலும், சமரச முறையை கையாண்டு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கின்றன. சமரச முறையின் மூலம் வழக்குகளை தீர்மானிப்பதை உறுதி மொழியாக ஏற்றுக்கொண்டு இனி வருங்காலங்களில் வழக்குகளுக்கு முன்பே சமரசத்தை நாடுவோம், என்றார்.