பெண்ணாடம் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க கோரி விழிப்புணர்வு ஊர்வலம்
பெண்ணாடம் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க கோரி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
பெண்ணாடம்,
பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை ராஜலட்சுமி வரவேற்றார். தொடர்ந்து விழிப்புணர்வு ஊர்வலத்தை பெண்ணாடம் பேரூராட்சி மன்ற தலைவர் அமுதலட்சுமி ஆற்றலரசு கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலமானது பள்ளியில் புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுவதை வலியுறுத்தியும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி சேர்க்கை நடைபெற்று வருவது குறித்தும், இந்த ஆண்டு முதல் 11-ம் வகுப்பில் பயாலஜி பிரிவு ஆங்கில வழி கல்வி புதியதாக தொடங்க இருப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவர்கள் சேர்க்கை குறித்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் தி.மு.க. செந்துறை ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி, வார்டு கவுன்சிலர்கள் ஹைருன்நிஷா, அஷ்டலட்சுமி முத்துகிருஷ்ணன், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்சிநர் ஜெயஸ்ரீ, சிறப்பு ஆசிரியை ஞானஅருள்மேரி மற்றும் ஆசிரியர்கள் பொன்னிவளவன், பாலசுப்பிரமணியன், மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முதுகலை ஆசிரியர் மதியழகன் நன்றி கூறினார்.