மாணவர்களை அரசுப்பள்ளியில் சேர்க்க கோரி விழிப்புணர்வு ஊர்வலம்
மறையூரில் மாணவர்களை அரசுப்பள்ளியில் சேர்க்க கோரி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் மறையூரில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் சார்பில் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கக்கோரி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மீனா தலைமை தாங்கினார்.ஆசிரியர் பயிற்றுநர் சாரங்கபாணி, வார்டு உறுப்பினர் மாதவன், பட்டதாரி ஆசிரியர் மலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மறையூர் ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு மாணவ மாணவிகளின் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக "நம் பள்ளி நம் பெருமை" "அனைவரும் அரசு பள்ளியில் படிப்போம் அகிலத்தை வெல்வோம்" "பெண்களைப் படிக்க வைப்போம் சமுதாய வளர்ச்சிக்கு வழிவகுப்போம்" "பள்ளி வயது குழந்தைகளை வேலைக்கு அனுப்பாதீர் பள்ளிக்கு அனுப்புங்கள்" உள்ளிட்ட பதாகைகளை மாணவ மாணவிகள் ஏந்தி ஊர்வலமாக வந்து பள்ளியை அடைந்தனர். இதில் பள்ளி ஆசிரியர்கள் பத்மாவதி, இந்திராணி, தனலட்சுமி,மங்கை ஆகியோர், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பட்டதாரி ஆசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.