ஈரோட்டில் சட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
ஈரோட்டில் சட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் நேற்று நடந்தது. ஊர்வலத்துக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான முருகேசன் தலைமை தாங்கி, கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள், சட்ட விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம், திருப்பூர் குமரன் ரோடு வழியாக சம்பத் நகர் வரை சென்று மீண்டும் கோர்ட்டு வளாகத்தில் நிறைவடைந்தது.
இதில் மாவட்ட நீதிபதிகள், தலைமை குற்றவியல் நீதிபதி, சார்பு மற்றும் உரிமையியல் நீதிபதிகள், வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.