அரசு ஆஸ்பத்திரியில் விழிப்புணர்வு பேரணி


அரசு ஆஸ்பத்திரியில் விழிப்புணர்வு பேரணி
x

பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

திருநெல்வேலி

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17-ந்தேதி உலக விபத்து காய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மிகவும் ஆபத்தான கட்டத்தில் ஓர் உயிரை பாதுகாத்து உடல் காயத்தால் உண்டாகும் மரணத்தை தவிர்க்க கையாள வேண்டிய வழிமுறைகளை கடைபிடித்து நடைமுறைப்படுத்துவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி, பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவு சார்பாக உலக விபத்து காய தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு துணைத் தலைவர் டாக்டர் முகமது ரபிக் தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியம், உறைவிட மருத்துவ அதிகாரி ஷியாம் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டீன் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் செவிலியர் பயிற்சி மாணவிகள், பாரா மெடிக்கல் மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விபத்து காய தடுப்பு மற்றும் மேலாண்மை உறுதிமொழி எடுக்கப்பட்டது.

பேரணியில் பங்கேற்றவர்கள் விபத்து தடுப்பு விழிப்புணர்வு முழக்கங்களை முழங்கியும், விபத்து தடுப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், ஆஸ்பத்திரி வளாகத்தை சுற்றி வந்தார்கள்.

பேரணியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அவசர சிகிச்சை பிரிவு இணை பேராசிரியர் டாக்டர். ஐரின் அருணா எட்வின் நன்றி கூறினார்.நிகழ்ச்சிகளை செவிலியர் பயிற்றுனர் செல்வன் தொகுத்து வழங்கினார்.


Next Story