கடலூரில்'மஞ்சப்பை' குறித்த விழிப்புணர்வு பேரணிகலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்
கடலூரில் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பாலசுப்பிரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
'மஞ்சப்பை'
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது மற்றும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு பேரணி கடலூரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கிய பேரணியானது பாரதி சாலை வழியாக சென்று வந்தது. பேரணியில் கடலூர் புனித வளனார் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மஞ்சப்பை பயன்படுத்துவதன் நன்மைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றும், பொதுமக்களிடம் மஞ்சப்பை வினியோகம் செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உறுதிமொழி
முன்னதாக நண்பர்கள், பொதுமக்கள் அனைவரையும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்குமாறும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத துணிப்பைகளை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என கலெக்டர் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தானராஜா மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.