விழுப்புரத்தில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணி


விழுப்புரத்தில்    மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விழுப்புரம்

விழிப்புணர்வு பேரணி

மின் சிக்கனம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தேசிய மின் சிக்கன வார விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14 முதல் 20 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் சார்பில் கடந்த ஒரு வாரமாக மின் சிக்கன வார விழா கொண்டாடப்பட்டது.

இதன் நிறைவு நாளான நேற்று மாலை மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மண்டல தலைமை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திர விஜய் முன்னிலை வகித்தார்.

விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து புறப்பட்ட இப்பேரணியை மாவட்ட கலெக்டர் மோகன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், மின் சிக்கனம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காகவும், மின்னழுத்தம், மின் பற்றாக்குறையின்றி அனைவருக்கும் சீரான மின்சார வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக தேசிய மின் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில் தேசிய மின் சிக்கன வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் மின்சாரம் தொடர்பான சாதனங்களை முறையாக கையாள்வதன் மூலம் நம்மை பாதுகாத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் மின் சிக்கனத்தையும் கடைபிடிக்கலாம். இதன் மூலம் தங்களுடைய பொருட்செலவு குறைவதுடன், நாட்டிற்கும் பேரூதவியாக அமைந்திடும் என்றார்.

500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

இதனை தொடர்ந்து மின்வாரிய பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று மின் சிக்கனம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் மதனகோபால், சைமன் சார்லஸ், சிவகுரு, சித்ரா, செந்தில்குமார், ஆறுமுகம், உதவி செயற் பொறியாளர்கள் சிவசங்கரன், கார்த்திக், சம்பத்குமார், அண்ணாதுரை, நாகராஜன், விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story